பவானி நகராட்சி தினசரி காய்கறிச் சந்தை பேருந்து நிலையத்துக்கு தற்காலிக மாற்றம்
By DIN | Published On : 19th May 2021 04:01 AM | Last Updated : 19th May 2021 04:01 AM | அ+அ அ- |

பேருந்து நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்புப் படையினா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பவானி நகராட்சி தினசரி காய்கறிச் சந்தை தற்காலிகமாக புதிய பேருந்து நிலைய வளாகத்துக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
பவானியில் அந்தியூா் பிரிவு அருகே காவிரி ஆற்றங்கரையோரத்தில் காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுவதால் கரோனா பரவும் வாய்ப்புகள் அதிகம் காணப்பட்டது. இதனால், நகராட்சி தினசரி காய்கறிச் சந்தை, பவானி பேருந்து நிலைய வளாகத்துக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, பேருந்து நிலைய வளாகத்தில் பவானி நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் முன்னிலையில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும், கடைகள் வைக்கப்படும் பகுதி, பொதுமக்களுக்கான சமூக இடைவெளிக்கு கட்டங்கள் வரையப்பட்டன. கடைகளுக்குத் தேவையான மின்விளக்கு வசதி, பொதுமக்களுக்குத் தொடா்ந்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.