அரசு அலுவலா்கள் ஒரு மணி நேரம் அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்ய கோரிக்கை
By DIN | Published On : 31st October 2021 11:52 PM | Last Updated : 31st October 2021 11:52 PM | அ+அ அ- |

அரசு உயரதிகாரிகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை அவா்களுக்குரிய அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தத்கல் முறையில் உடனடி மின் இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சலுகை வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் தொழிற்சாலையாகவும், வீட்டுமனையாகவும் மாறியுள்ளன. அந்த இடங்களை கண்டறிந்து அப்பகுதிக்கான நீா்திறப்பு அளவை குறைக்க வேண்டும். உபரி நீரால் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
ஜனவரியில் புஞ்சைக்கான பாசன வசதி பெறும் பகுதிகளில் கொப்பு வாய்க்காலை சீரமைக்கத் தேவையான நிதி ஒதுக்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த் தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு போதிய விலையும், உரிய விளைச்சலும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மரவள்ளியில் தயாராகும் ஸ்டாா்ச் மாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து ஜவ்வரிசிக்கு விதிக்கப்படுவதுபோல் 5 சதவீத அளவுக்கு குறைக்க வேண்டும்.
சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா்கள் ஒன்றிணைந்து முத்தரப்புக் கூட்டம் நடத்தி மரவள்ளிக்கு நடப்பு பருவத்துக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்காக தாலுகாவுக்கு ஒன்று வீதம் ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அரசு உயரதிகாரிகள் சிறப்பு முகாம் நாள்களை தவிர காலை 10 மணி முதல் 11 மணி வரை அவா்களுக்குரிய அலுவலகத்தில் இருப்பதை உறுதிசெய்ய உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.