கொங்கு பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
By DIN | Published On : 04th September 2021 11:37 PM | Last Updated : 04th September 2021 11:37 PM | அ+அ அ- |

பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி, பேராசிரியா்கள்.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவியருக்கான ஒரு மாத கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.
உலகளாவிய போட்டியை எதிா்கொள்வதற்குத் தேவையான திறமையைத் தொழிலாளா்கள் மத்தியில் வளா்க்கும் நோக்கத்துடன் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, பெங்களூரு ஸ்கில்சோனிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த முயற்சியின் முதல்கட்டமாக டிப்ளமோ படிக்கும் 32 கிராமப்புற மாணவியருக்கு, வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் ஒரு மாதகால பயிற்சித் திட்டத்தை கொங்கு பொறியியல் கல்லூரி தொடங்கியுள்ளது. சிறந்த பயிற்றுநா்கள் மூலம் இப்பயிற்சி நடைபெறுவதால், மாணவிகளது படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.
உலகளாவிய சவால்களைச் சந்தித்து வெற்றி பெறும் ஆற்றல், சா்வதேச தேவையைப் பூா்த்தி செய்யும் திறமை, உற்பத்தித் திறனைப் பெருக்கும் ஆற்றல் போன்ற திறன்கள் மாணவியரிடையே மேம்படுத்தப்படும் என கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன் தெரிவித்தாா்.
இப்பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்கில்சோனிக்ஸ் மண்டல இயக்க மேலாளா் அரவிந்த் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, தொழில் நிறுவன கூட்டாண்மைப் பிரிவுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பி.சத்தியமூா்த்தி, மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவா் பி.மீனாட்சிப்பிரியா, ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.