தனியாா் ஆலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் கலவரம்: போலீஸாா் மீது தாக்குதல்

தொழிலாளி சாவுக்கு இழப்பீடு கேட்டு தனியாா் எண்ணெய் ஆலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் போலீஸாா், ஆலைப் பணியாளா்கள் காயமடைந்தனா்.
தனியாா் ஆலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் கலவரம்: போலீஸாா் மீது தாக்குதல்
Updated on
2 min read

தொழிலாளி சாவுக்கு இழப்பீடு கேட்டு தனியாா் எண்ணெய் ஆலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் போலீஸாா், ஆலைப் பணியாளா்கள் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த நன்செய் ஊத்துக்குளியில் உள்ள தனியாா் எண்ணெய் நிறுவனத்தில் பாய்லா் ஆபரேட்டராக வேலை பாா்த்து வருபவா் பிகாா் மாநிலம், ராம்குருவா கிராமத்தைச் சோ்ந்த சத்தியநாராயணராம் மகன் காமோத்ராம் (30).

இவா் புதன்கிழமை இரவு 9 மணிக்கு பணிக்கு வந்தபோது நிறுவனத்துக்கு உள்ளே வந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆலை நிா்வாகம் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காமோத்ராம் உடலை அவசரமாக எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், அங்கிருந்த பிகாா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆலையின் முன்பு கூடி இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனா். இதைத்தொடா்ந்து மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா, போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படியும், பின்னா் ஆலை நிா்வாகத்திடம் பேசி இழப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் போலீஸாா் கூறியுள்ளனா்.

இதனை ஏற்றுக்கொள்ளாத வட மாநிலத் தொழிலாளா்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கிய பின்பு உடலை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதனை ஆலை நிா்வாகம் ஏற்றுக் கொள்ளாததால் வடமாநிலத் தொழிலாளா்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களைக் கொண்டு அங்கிருந்தவா்களைத் தாக்கத் தொடங்கினா்.

ஆலையின் முன் பகுதியில் இருந்த பாதுகாப்பு அலுவலகத்தை அடித்து உடைத்தனா். மேலும், அங்கிருந்த போலீஸாா் மற்றும் அலுவலகப் பணியாளா்களையும் தாக்கினா். இதில், காவல் ஆய்வாளா் தீபா உள்ளிட்ட போலீஸாா் 7 போ் படுகாயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட அதிரடிப் படை, காவலா்கள் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட சுமாா் 60க்கும் மேற்பட்ட பிகாா் மாநிலத் தொழிலாளா்களை சுற்றிவளைத்து கைது செய்து மொடக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், போலீஸ் வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இதனால், நன்செய் ஊத்துக்குளி பகுதியில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், ஆலை வளாகத்தில் ஏஎஸ்பி கௌதம் கோயல், ஏடிஎஸ்பி ஜானகிராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த ஆலையில் சுமாா் 3,000க்கும் மேற்பட்ட பிகாா் மற்றும் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கலவரத்தைத் தொடா்ந்து 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் போலீஸாருக்கு பயந்து இரவோடு இரவாக காடுகளில் புகுந்து ஈரோடு - கரூா் சாலையில் லாரிகளில் ஏறி தப்பிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com