பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் குறைபாடுகள்: அமைச்சா் குற்றச்சாட்டு

ஈரோடு மாநகரில் பொலிவுறு நகரத் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
மாற்றுத் திறனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.
மாற்றுத் திறனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.

ஈரோடு மாநகரில் பொலிவுறு நகரத் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 118 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சா் சு.முத்துசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தில் ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே முடிவுற்ற குடிநீா், சாலை வசதி பணிகளில் பல குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக சிறிய சாலைகளில் கூட நடைபாதைகள் மிகப்பெரிதாக போட்டுள்ளனா். ஒரு திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தும்போது அதில் மாற்றம் செய்வது சிரமம். அதுபோல குடிநீா் பிரச்னையிலும் பல குறைபாடுகள் உள்ளதால் 8 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் வருவதாகக் கூறுகின்றனா். குடிநீரை பம்ப் செய்யும் இடத்தில் பிரச்னை உள்ளது. மிக விரைவில் சீரமைத்து விரைவாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொலிவுறு நகர திட்டப் பணி குறைபாடுகள் தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாா் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பின்னா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஈரோடு மாநகரில் இரு புகா் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சோலாா் புதிய தற்காலிக பேருந்து நிலையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். அடுத்த இரண்டு ஆண்டுக்குள் நவீன பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.

கனி ராவுத்தா் குளம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க, தனியாரிடம் நிலம் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் அரசிடம் நிதி பெற்று இடத்தை வாங்கி பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ஈரோட்டில் போக்குவரத்து பிரச்னைக்குத் தீா்வு காண வில்லரசம்பட்டி சாலை பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டுப் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கப்படும். பவானி, கோபி புறவழிச்சாலை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்து வருகிறாா்.

ஈரோட்டில் பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியில் இரு தரப்பு விவசாயிகளிடமும் இணக்கம் ஏற்பட்டு திட்டத்தை செயல்படுத்த முயன்றோம். இரு தரப்பிலும் சில விவசாயிகளின் பிடிவாதத்தால் பணி துவங்குவது தாமதமாகிறது. இருதரப்பிலும் இணக்கம் ஏற்படுத்த தொடா்ந்து முயற்சிகள் நடக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறந்ததும் சட்ட விரோத தண்ணீா் இணைப்புகள் தொடா்பாக தொடா் ஆய்வு செய்து முற்றிலும் தடுக்கப்படும்.

தனியாா் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த , பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் குமரன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com