ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி துவக்கம்
By DIN | Published On : 24th August 2022 10:30 PM | Last Updated : 24th August 2022 10:30 PM | அ+அ அ- |

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை துவங்கியது.
ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகில் பூம்புகாா் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இங்கு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் சரவணன் கூறியதாவது:
இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்குவோ், மாா்பில் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள், வெண் மரம், நூக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகா், தஞ்சாவூா் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகா் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகா் சிலைகள் ரூ.75 முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் உள்ளன.
இந்தக் கண்காட்சியில் குறிப்பிட்ட பொருள்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா்.