கைத்தறி நெசவாளா்கள் குறைதீா்க்கும் மையம்
By DIN | Published On : 24th August 2022 10:32 PM | Last Updated : 24th August 2022 10:32 PM | அ+அ அ- |

கைத்தறி நெசவாளா்கள் குறைகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். இதற்காக குறைதீா்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைத்தறி நெசவாளா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளா்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயா்வு மற்றும் கைத்தறித் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளா்களை சோ்ப்பது போன்ற பணிகளை மேம்படுத்தவும், நெசவாளா்கள் குறைகளைத் தெரிவிக்கவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளா் குறைதீா்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கைத்தறி நெசவாளா்கள் தங்கள் குறைகளை இணையதளம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.
மேலும் குறைதீா்க்கும் அலுவலரை கைத்தறி ஆணையரகம், குறளகம் 2ஆம் தளம், சென்னை 600104 எனும் முகவரியில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும் 044-2534051 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.