கனமழை:பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியா் வேண்டுகோள்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் தற்போது வடகிழக்குா் பருவமழை அதிகமாக இருப்பதாலும், வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகி இருப்பதாலும் ஈரோடு மாவட்டத்துக்கு வரும் சனிக்கிழமை கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பி உள்ளதால் ஆறுகள், நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் இருகரைகளிலும் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
மின் கம்பம், மழை, வெள்ளநீா் தேங்கும் இடங்களில் கால்நடைகளைக் கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் கால்நடைகளைப் பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் அருகில் செல்லவோ, கால்நடைகளைக் கட்டி வைக்கவோ கூடாது. மழைப்பொழிவின்போது தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது மின்சாதனங்களைக் கவனமுடன் கையாள வேண்டும். மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால் உடனடியாக மின்சார வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.