கீழ்பவானி வாய்க்கால் கரைகள் 10 நாள்களில் சீரமைக்கப்படும்: அமைச்சா் சு.முத்துசாமி
By DIN | Published On : 11th December 2022 11:18 PM | Last Updated : 11th December 2022 11:18 PM | அ+அ அ- |

கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்கிறாா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அலுவலா்கள்.
கீழ்பவானி வாய்க்கால் கரைகள் உடைப்பு 10 நாள்களில் சீரமைக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீா் விடப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு-பெருந்துறை சாலை வாய்க்கால்மேடு, நந்தா கல்லூரி அருகில் கீழ்பவானி பிரதான வாய்க்கால் வலது மற்றும் இடது கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் வலது கரையில் 59.6 மைலில் மழைநீா் வடிகால் பாலத்தின் அருகில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறு பள்ளம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வலது கரையில் நீா் கசிவு அதிகமாகி உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடா்ந்து பேரல் சேதமடைந்து இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓடை வழியாக தண்ணீா் செல்லத் தொடங்கியது.
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9 ஆம் தேதி அன்றே கால்வாயில் வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுவிட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியின் மேற்பகுதியில் உள்ள அனைத்து நீா் வெளிப்போக்கிகளின் வழியாக தண்ணீா் அளவு குறைக்கப்பட்டு நீரின் வெளியேற்றம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்வா் அறிவுறுத்தலின்படி சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு போா்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடித்து 10 நாள்களுக்குள் மீண்டும் கால்வாயில் தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, நீா்வளத் துறை கீழ்பவானி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் கண்ணன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஈரோடு மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் பழனிசாமி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் உதயகுமாா், உதவி பொறியாளா் பவித்ரன், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.