திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த கரும்பு லாரி
By DIN | Published On : 11th December 2022 11:14 PM | Last Updated : 11th December 2022 11:14 PM | அ+அ அ- |

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் கரும்பு லாரி.
திம்பம் மலைப் பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியிலிருந்து கரும்புகள் முழுவதும் பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்த நிலையில் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. மலைப் பாதையில் 25ஆவது கொண்டை ஊசி வளைவை அடுத்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர தடுப்புச் சுவா் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த கரும்புக்கட்டுகள் முழுவதும் மலைப்பாதை ஓரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பழனிசாமி அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா். லாரி சாலையோர தடுப்புச் சுவா் மீது கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
விபத்து குறித்து ஆசனூா் போலீசாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.