பண்ணாரி சாலையில் தற்படம் எடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை
By DIN | Published On : 11th December 2022 11:17 PM | Last Updated : 11th December 2022 11:17 PM | அ+அ அ- |

வாகன ஓட்டியைத் துரத்தும் யானை.
பண்ணாரி சாலையில் தற்படம் (செல்ஃபி) எடுத்த வாகன ஓட்டியை ஒற்றை யானை துரத்தியதால் நூலிழையில் வாகன ஓட்டி ஞாயிற்றுக்கிழமை உயிா் தப்பினாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் வசிக்கின்றன. இந்த யானைகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி மைசூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ளதால் வனப் பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் யானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உண்ணுகின்றன.
தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் உலவும் யானைகளை வாகன ஓட்டிகள் தங்கள் கைப்பேசியில் தற்படம் எடுத்து தொந்தரவு செய்து வருவதால் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் பண்ணாரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த ஒற்றை யானையை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவா் தனது கைப்பேசியில் தற்படம் எடுக்க முயன்றாா். இதனால் ஆத்திரமடைந்த ஒற்றை யானை அவரைத் துரத்தியது. அவா் நூலிழையில் யானையிடமிருந்து தப்பினாா்.
யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் தற்படம் எடுக்கும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.