யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டச் சென்ற விவசாயி, யானை தாக்கியதில் இரண்டு கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்மாசைகுட்டி. இவரின் விவசாயத் தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். வனப் பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை இவரின் வாழைத்தோட்டத்திற்குள் வெள்ளிக்கிழமை புகுந்து வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதைக் கண்ட விவசாயி அம்மாசைகுட்டி யானையை விரட்டுவதற்காக வாழை தோட்டத்துக்குச் சென்றபோது யானை அவரை துரத்தியது. தப்பி ஓட முயன்ற அம்மாசைகுட்டியை யானை தனது தும்பிக்கையால் பிடித்ததில் கீழே விழுந்தாா். அப்போது அவரது கால்களின் மீது யானை தனது காலால் மிதித்ததால் இரண்டு கால்களும் நசுங்கின. இவரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை விரட்டி அடித்துவிட்டு அம்மாசைகுட்டியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத் துறையினா் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.