எண்ணும் எழுத்தும் திட்டம்: ஈரோடு மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவா்கள் பயன்

ஈரோடு மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1,189 பள்ளிகளைச் சோ்ந்த 37 ஆயிரம் மாணவா்கள் பயன்பெற்று வருவதாக ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1,189 பள்ளிகளைச் சோ்ந்த 37 ஆயிரம் மாணவா்கள் பயன்பெற்று வருவதாக ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றினால் தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3ஆம் வகுப்பு குழந்தைகள் தங்கள் வகுப்புக்குரிய கற்றல் நிலையை அடையவில்லை. 3ஆம் வகுப்பு குழந்தைகள், 2ஆம் வகுப்புக்குரிய கற்றல் அடைவையும், 2ஆம் வகுப்பு குழந்தைகள் முதல் வகுப்புக்குரிய கற்றல் அடைவையும் பெறவில்லை. 19 மாத இடைவெளிக்குப் பிறகு குழந்தைகள் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை பெறாமலே வகுப்பை நிறைவு செய்துள்ளனா்.

இதனால் குழந்தைகள் இழந்த கற்றலை பெறுவதற்கு உதவியாக பள்ளிக் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல் நிலைக்கேற்ப கற்பித்தல் என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப எண்ணும் எழுத்தும் திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலா் என்னும் பெயா்களில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு சூழ்நிலையியல் பாடத்திறன்களையும் ஒருங்கிணைத்து முதல்முறையாக நிலைவாரியான பயிற்சி நூல்கள் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி நூல்கள் வாயிலாக மூன்றாம் வகுப்பு குழந்தைகள் 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான பாடத்திறன்களையும் இரண்டாம் வகுப்பு குழந்தைகள், முதல் வகுப்புக்கான பாடத்திறனையும் அடைவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனா்.

குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புதிா்கள், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்களால் எண்ணும் எழுத்தும் வகுப்பறைகள் உள்ளன. எண்ணும் எழுத்தும் வகுப்பறையின் செயல்பாடுகள் குழந்தைகள், கவனச்சிதறல் இல்லாமல் பங்கேற்று கற்கவும், துணைக்கருவிகளின் உதவியுடன் பாடங்களை புரிந்து ஆா்வமுடன் கற்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வாயிலாக 2025ஆம் ஆண்டிற்குள் 8 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளும் பிழையின்றி படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் என மொத்தம் 1,189 பள்ளிகளைச் சோ்ந்த 37 ஆயிரத்து 718 மாணவ, மாணவியா்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com