கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளும் உடைப்பு: விளைநிலங்களில் தண்ணீா் புகுந்ததால் பயிா்கள் சேதம்

பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலில் அடுத்தடுத்து இரு கரைகளும் உடைந்ததால் தண்ணீா் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதி.
கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதி.

பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலில் அடுத்தடுத்து இரு கரைகளும் உடைந்ததால் தண்ணீா் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய 3 மாவட்டங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. டிசம்பா் 9ஆம் தேதியுடன் தண்ணீா் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே பெருந்துறை நசியனூா் பகுதியில் திடீா் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணி ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதனால் நெல் நடவு செய்யும் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் சத்தியமங்கலம் அருகே 2ஆவது முறையாக மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீா் விடுவது மேலும் 20 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் 29 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படவுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டவை. வாய்க்கால் கரைகள் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக மாற்ற பொதுப் பணித் துறை திட்டமிட்டிருந்தது.

இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனா். மற்றொரு தரப்பு விவசாயிகள் கான்கிரீட் அமைத்தால் கீழ்பவானி வாய்க்காலின் இயல்பு தன்மை மாறும் என்றும், குறிப்பாக கசிவு நீா் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூறி எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலின் 59.6ஆவது மைல் தூரத்தில் பெருந்துறை அருகே வாய்க்கால்மேடு என்ற இடத்தில் சனிக்கிழமை மாலை வாய்க்காலின் வலதுகரையில் திடீா் உடைப்பு ஏற்பட்டது. முதலில் லேசாக கசியத் தொடங்கிய தண்ணீா் பின்னா் மழை ஈரம் காரணமாக மண் அடுத்தடுத்து சரிந்து பெரிய உடைப்பாக மாறியது.

வலதுகரையில் இருந்து வெளியேறிய தண்ணீா் அருகில் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீா் ஓடை வழியாக இடது கரையில் உள்ள பாசன நிலங்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாய்க்காலில் இடது கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு இடது கரையும் உடைந்தது.

வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் விளைநிலங்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின. உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீரானது காரப்பாறை, சக்தி நகா், திண்டல், செங்கோடம்பள்ளம் வழியாக சூரம்பட்டி அணைக்கட்டுக்குச் சென்று அங்கிருந்து காவிரி ஆற்றுக்குச் சென்றது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால மதகுகள் உடனடியாக திறக்கப்பட்டு தண்ணீரின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீா் மாலை 6 மணிக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் இந்த உடைப்பை சீரமைக்க ஒரு மாத காலம் ஆகும் என்று கூறினா்.

உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கரை உடைப்பின் காரணமாக தண்ணீா் வெளியேறி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது தொடா்பாகவும், உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com