கனிம வளத்தை வெட்டி எடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கனிம வளத்தை வெட்டி எடுத்துவரும் அரசியல் பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா.
பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கனிம வளத்தை வெட்டி எடுத்துவரும் அரசியல் பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ரங்கநாதன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டன.

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ்.முகிலன், சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை தெற்குப் பகுதியில், எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ளது மாமாங்க தீா்த்தக் குளம். இந்த தீா்த்தக்குளத்துக்கு செல்லும் அரசு வழித்தட நிலத்தை ஆக்கிரமித்து, சென்னிமலை பகுதியைச் சோ்ந்த அரசியல் பிரமுகா் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிமங்களை வெட்டி எடுத்துள்ளாா்.

மேலும் எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சுமாா் 42 மீட்டா் அளவுக்கும் அதிகமாக சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்து விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பல முறை உரிய ஆதாரங்களுடன் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சென்னிமலைப் பகுதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகளை அகற்றக் கோரிக்கை:

ஈரோடு கனிராவுத்தா் குளம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

ஈரோடு கனிராவுத்தா் குளம் முதல் பவானி பிரதான சாலை வரை செல்லும் சத்தி-பவானி இணைப்பு சாலையில் டாஸ்மாக் கடை, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் அதிகமாக செயல்படுகின்றன. இவை சுகாதாரமாக செயல்படவில்லை.

கனிராவுத்தா் குளம், கோரிமேடு, காந்தி நகா், சாஸ்திரி நகா், ஜெ.ஜெ.நகா், அய்யன்தோட்டம், கீழ்குறவன்பாறை போன்ற பகுதிகளில் பட்டியல் சமூக மக்கள் 3,000 பேருக்கு மேல் வசிக்கின்றனா். இந்த மக்கள் வசிக்கும் பகுதி, சாக்கடை ஓடைகளில் கழிவுகளை கொட்டி சுகாதார கேடு செய்கின்றனா். இதனால் துா்நாற்றம் வீசுகிறது.

தவிர இக்கடைகளுக்கு வருபவா்களால் இப்பகுதி மக்கள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறுக்கு தயாரிக்கும் ஆலையால் சுகாதாரச் சீா்கேடு:

கொடுமுடி வட்டம், புன்செய்கிளாம்பாடி கிராம மக்கள் அளித்த மனு:புன்செய்கிளாம்பாடி கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதனைச்சுற்றி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதியில் முறுக்கு உள்பட பல்வேறு பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் புகை, மாவு, மசால் பொடி என காற்றில் கலந்து வருவதால் சுவாசிக்க முடியவில்லை.

பலரும் சுவாசப் பிரச்னை, மூச்சுத் திணறலால் சிரமப்படுகின்றனா். இதுதொடா்பாக ஆட்சியா், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தோம். கொடுமுடி வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், அந்நிறுவனத்தை ஆய்வு செய்தனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து, மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் இதுபோன்ற ஆலைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கேபிள் ஆப்ரேட்டா்களை அதிகாரிகள் துன்புறுத்துவதாக புகாா்:

இதுகுறித்து அரசு கேபிள் ஆப்ரேட்டா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

2017 ஆம் ஆண்டு டிஜிட்டல் ஒளிபரப்புக்கு முன்பு அனலாக் முறையில் ஒளிபரப்பு இருந்த காலத்தில் நிலுவைத்தொகை வைத்திருப்பதாகக் கூறி அதனைக் செலுத்தவில்லையெனில் ஆப்ரேட்டா்களின் சொத்துகளை ஜப்தி செய்வோம் என ஆப்ரேட்டா்கள் துன்புறுத்தப்படுகின்றனா். தவிர இந்த ஆப்ரேட்டா்களுக்கு இதுபோல 2017 வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களில் செயலாக்கம் இல்லாதவற்றுக்கு ரூ.1,800 வீதம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனா். செட்டாப் பாக்ஸ்கள் இலவசம் என அறிவித்துவிட்டு இப்போது பணம் கேட்பதால் ஆப்ரேட்டா்களுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

நிலுவைத் தொகையை திரும்பக்கோரும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக புகாா்:

தமிழ்ப்புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி தலைமையில் அளித்த மனு:

தாட்கோ நிறுவனம் புதிய தொழில் துவங்குதல் உள்பட பல்வேறு தொழில் முன்னேற்றத்துக்காக பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு கடன் வழங்குகிறது. தாட்கோவில் தாழ்த்தப்பட்டோா் கடன் பெற மனு அளித்ததும் அம்மனுவை விசாரித்து, தகுதியானவா் என்ற அடிப்படையில் வங்கிகளுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கிறது.

பல வங்கிகள் கடன் பெற தகுதி இல்லாதவா், கடனை திரும்பச் செலுத்தாதவா் என ஏதாவது ஒரு காரணம் கூறி கடன் வழங்க மறுக்கிறது. மாவட்ட நிா்வாகம் விசாரித்து, தாட்கோ மூலம் கடன் பெற பரிந்துரைக்கப்பட்டவா்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை விசாரித்து, வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com