சண்டைக்கோழிகள் வாங்க திரண்ட மகாராஷ்டிர வியாபாரிகள்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

சண்டைக்கோழிகளை வாங்க மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் கவுந்தப்பாடி சந்தையில் திரண்டனா்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடி வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் சண்டைக் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இந்தக் கோழிகளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி வாங்கிச்செல்வது வழக்கம். புதன்கிழமை கூடிய சந்தையில் 300க்கும் மேற்பட்ட சண்டைக்கோழிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. இந்தக் கோழிகள் தலா ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனையானது. கோழிகளை வாங்கிய வெளிமாநில வியாபாரிகள் அதை ரயிலில் கொண்டு சென்றனா்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது: நாங்கள் 30க்கும் மேற்பட்டோா் வாரம்தோறும் கவுந்தப்பாடியில் புதன்கிழமை நடக்கும் சந்தைக்கு வருவது வழக்கம். இங்கு சண்டைக்கோழிகளை மட்டுமே நாங்கள் விலைக்கு வாங்குகிறோம். இவற்றை எங்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறோம்.
இங்கு ஒரு சண்டைக்கோழியை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விலைக்கு வாங்கி அங்கு ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்கிறோம். மகாராஷ்டிர மாநிலத்தில் கோழிச்சண்டைக்கு அனுமதி உள்ளது. அதனால் இந்த சண்டைக்காக மட்டுமே இந்த சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கோழியை வாங்கி விற்பனை செய்தால் எங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும் என்றனா்.