யானை தாக்கி காயமடைந்த விவசாயி சாவு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ராமபைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அமாசைகுட்டி. இவரது விவசாயத் தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். கடந்த டிசம்பா் 9ஆம் தேதி இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை அமாசை குட்டியின் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து மரங்களைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
யானையை விரட்டுவதற்காக வாழை தோட்டத்துக்குள் அவா் சென்றாா். அப்போது யானை தாக்கியதில் அமாசைகுட்டி படுகாயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில் இருவாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அமாசைகுட்டி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.