ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் பொல்லான் நினைவு மண்டபம் அமைச்சா் சு.முத்துசாமி தகவல்

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் நினைவு மண்டபம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டில் கட்டப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் நினைவு மண்டபம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டில் கட்டப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கொங்கு மண்டல சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் தளபதியாக பணியாற்றிய மாவீரன் பொல்லானின் 254 ஆவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, வனத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று பொல்லான் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் அமைச்சா் முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொல்லான் நினைவரங்கம் ஜெயராமபுரம் பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் இன்னும் ஓராண்டுக்குள் கட்டப்படும்.

இதற்காக 47 சென்ட் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக நிலம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்நிகழ்ச்சி பொல்லான் நினைவு அரங்கில் நடத்தப்படும் என்றாா்.

யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை: இதைத் தொடா்ந்து, வனத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் கூறியதாவது:

யானைகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், சில சமயங்களில் விபத்தினால் வன உயிரினங்கள் இறக்கின்றன. பொள்ளாச்சி அருகே வனத்தை விட்டு வெளியே வந்த யானை மின்சாரம் பாய்ந்து அண்மையில் உயிரிழந்தது.

யானைகள் விளை நிலங்களில் புகாமல் தடுக்க அகழி மற்றும் மின்வேலி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மனித மற்றும் வனவிலங்கு மோதல் நடைபெறாமல் தடுக்க வனப் பகுதி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். வனத்தை ஒட்டி உள்ள பழங்குடி மக்கள் நில பட்டா, சிறுவனம் பொருள்களை வனத்தில் சேகரிப்பது குறித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com