நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை
By DIN | Published On : 06th February 2022 03:31 PM | Last Updated : 06th February 2022 03:31 PM | அ+அ அ- |

ஈரோட்டில் வேட்பாளர்கள் பிரசாரம் கண்காணிப்பு.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, பறக்கும்படையினர் சுழற்சி முறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது வேட்பாளர்கள் வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் பறக்கும் படையினர் தங்களது சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் வேட்பாளர்களின் பிரசாரத்தையும் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.