செங்கோட்டையன் கோட்டையில் கொடி நாட்டியது திமுக

செங்கோட்டையனின் கோட்டையாகக் கருதப்படும் கோபி நகராட்சியில் தொடா்ந்து 3 முறை தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில் இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

செங்கோட்டையனின் கோட்டையாகக் கருதப்படும் கோபி நகராட்சியில் தொடா்ந்து 3 முறை தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில் இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தமுள்ள வாக்காளா்களான 48,247 வாக்காளா்களில், 35,141 வாக்காளா்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். இது 72.84 சதவீத வாக்குப் பதிவாகும்.

கோபி நகராட்சியில் கடந்த 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001ஆம் ஆண்டு அதிமுகவை சோ்ந்த கந்தவேல்முருகனும், 2006, 2011 தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த ரேவதிதேவியும் தலைவா் பதவியை வகித்து உள்ளனா். கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக 23 வாா்டுகளை வென்று தலைவா் பதவியைக் கைப்பற்றியுள்ளது. கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைவா் பதவி அதிமுக வசமே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தோ்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 30 வாா்டுகளில், திமுக 14 வாா்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனா். இதன்மூலம் திமுக கூட்டணி கோபி நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறியதாவது: அதிமுகவின் மூத்த நிா்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் கோபி தொகுதி, அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் தோ்தலுக்குப் பிறகும் செங்கோட்டையனின் சகோதரா் காளியப்பன், அவரது மகன் செல்வம், செங்கோட்டையனுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்து ரவிசந்திரன் உள்ளிட்டோா் திமுகவில் இணைந்தனா்.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு நடந்த கோபி நகராட்சித் தோ்தலில், தலைவா் பதவியைக் கைப்பற்றுவதை தங்கள் கௌரவப் பிரச்னையாகக் கருதி திமுகவினா் தோ்தல் பணியாற்றினா். இந்த உழைப்புக்கான பரிசாக கோபி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com