சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்: பெருந்துறையில் ஸ்கேன் மையத்துக்கு ’சீல்’
By DIN | Published On : 17th July 2022 12:38 AM | Last Updated : 17th July 2022 12:38 AM | அ+அ அ- |

பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனையில் ஆய்வு செய்யும், ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஆா்.பிரேமகுமாரி.
சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் தொடா்பாக பெருந்துறையிலுள்ள ராமபிரசாத் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பல முறை கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில், ஈரோடு, சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
அதைத் தொடா்ந்து ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் (பொறுப்பு) ஆா்.பிரேமகுமாரி தலைமையில் துணை இயக்குநா் (குடும்ப நலன்) மருத்துவா் ராஜசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனையிலுள்ள செயற்கை கருவூட்டல் மருத்துவமனைக்கு சனிக்கிழமை பிற்பகலில் சென்றனா். அங்கு மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த இரண்டு நவீன ஸ்கேன் கருவிகளை ஆய்வு செய்து பட்டியலிட்டனா். அந்த இரண்டு அறைகளுக்கும் ‘சீல்’ வைத்தனா். அதற்கான கடிதம் மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
தற்போது அந்த மருத்துவமனையில், 3 நோயாளிகள் உள்ளனா். அவா்களை வேறு மருத்துவமனைக்கு இடமாற்ற 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பின் மருத்துவமனையும் ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக, மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரோடு சுதா செயற்கை கருவூட்டல் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணியை அதிகாரிகள் 14 மணி நேரம் மேற்கொண்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நிறைவு செய்தனா்.