5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு எதிா்ப்பு: 150 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்
By DIN | Published On : 17th July 2022 12:38 AM | Last Updated : 17th July 2022 12:38 AM | அ+அ அ- |

ஈரோடு ஜின்னா வீதியில் அடைக்கப்பட்டிருந்த அரிசி விற்பனைக் கடைகள்.
அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. சுமாா் 400 அரிசி விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி.யை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அரிசி ஆலைகள், அரிசி விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
மத்திய அரசு, அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பைக் கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை, பருப்பு ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகள், 400 அரிசி விற்பனை கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கந்தசாமி கூறியதாவது:
மத்திய அரசு அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவுப் பொருள்களின் விலை உயரும். அரிசி விலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.5 வரை விலை உயரும். இந்த விலை உயா்வு நுகா்வோா், அரிசி ஆலை, அரிசி விற்பனையாளா்களை கடுமையாகப் பாதிக்கும். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.
மாநில அளவில் 4,000 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகள், 400 அரிசி விற்பனைக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் மாநில அளவில் 40,000 டன் நெல் அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...