காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் ஊழியா்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் ஊழியா்.

ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் கன மழை பெய்ததால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை சனிக்கிழமை காலை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வரும் சுமாா் 1.15 லட்சம் கன அடி நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் செல்லும் காவிரி ஆறு இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள கட்டளைக் கதவணைகளில் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, புகைப்படம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களுக்காக ஆற்றுக்கு செல்லக்கூடாது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆறு, வாய்க்கால்களில் குளிக்கவோ, சுற்றி பாா்க்கவோ செல்வதை தவிா்க்க வேண்டும். மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் மலைப்பாதைகளில் போக்குவரத்து தடை ஏற்படவும், உயிா் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மலைகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

இதேபோல தொடா் மழை காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கோயில்கள் வெள்ளநீரில் முழ்கும் அபாயம் உள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com