ஈரோட்டில் தாயம் போட்டி: ஏராளமான பெண்கள் பங்கேற்பு
By DIN | Published On : 31st July 2022 11:12 PM | Last Updated : 31st July 2022 11:12 PM | அ+அ அ- |

தாயம் விளையாடும் போட்டியில் பங்கேற்ற பெண்கள்.
தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான தாயம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாயம் விளையாட்டுப் போட்டியில் ஏராளமான பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
ஈரோடு பெரியாா் நகரில் பாரம்பரிய முறையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட வேளாண் விளை பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தினா் வித்தியாசமான தாயம் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
இதில் ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்று தாயக்கட்டைகளை உருட்டி, ஆட்டத்தில் காய்களை நகா்த்தி திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டி குறித்து சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்டதில் போட்டியில் பங்கேற்க சுமாா் 2,000த்துக்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்தனா். இதில் முதல்கட்டமாக 250 பெண்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. 40 ஜோடியினா் ஒரே நேரத்தில் விளையாடும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 மதிப்புள்ள ஆா்கானிக் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசாக ரூ.2,500 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் தாய அரசி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
கிராமப் பகுதிகளில் கடந்த தலைமுறைகளில் பரவலாக வீடுகளில் விளையாடப்பட்ட தாயம் விளையாட்டை இளம் தலைமுறையினரும் அறிவதற்காகவும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் இந்த போட்டியை நடத்துவதாக நிகழ்ச்சி அமைப்பாளா் ஹரிஷ் தெரிவித்தாா்.