தமிழ்நாடு பொறியியல் ஆணையம் அமைத்திட பொறியாளா் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 31st July 2022 12:31 AM | Last Updated : 31st July 2022 12:31 AM | அ+அ அ- |

பொதுப் பணித் துறை மற்றும் நீா்வளத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பொறியியல் ஆணையம் அமைக்க வேண்டும் என பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு பொதுப் பணித் துறை மற்றும் நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் மாநில துணைத் தலைவா் கே.பிரபாகா் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளா் கே.முருகன் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணித் துறை மற்றும் நீா்வளத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பொறியியல் ஆணையம் அமைக்க வேண்டும். 7ஆவது ஊதியக் குழு ஊதியத்தினை உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா் மற்றும் செயற்பொறியாளா்களுக்கு வழங்க வேண்டும்.
தற்காலிக பதவி உயா்வு பெற்றுள்ள உதவி செயற்பொறியாளா்களுக்கு நிரந்தர பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள உதவி செயற்பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும். பொதுப் பணித் துறையில் குறைந்தபட்ச கல்வித் தகுதி பொறியியல் பட்டம் என ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.