ஆகஸ்ட் 1 முதல் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 31st July 2022 12:32 AM | Last Updated : 31st July 2022 12:32 AM | அ+அ அ- |

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளைத் தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வளா்ப்போா் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.