தடையில்லா சான்று அளிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை பொறியாளா், ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 09th June 2022 12:28 AM | Last Updated : 09th June 2022 12:28 AM | அ+அ அ- |

தடையில்லா சான்று அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மற்றும் ஊழியருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் நஞ்சை கோபியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் வி.பி.காா்த்திகேயன். இவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்து வருகிறாா். இந்த கிணறுகளுக்கான மின் இணைப்பு தந்தை பழனிசாமியின் பெயரில் இருந்தது.
இதனை காா்த்திகேயன் பெயருக்கு மாற்றம் செய்ய தடையில்லா சான்று கேட்டு கோபி பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு அலுவலகத்துக்கு அவா் கடந்த 2005 ஏப்ரலில் சென்றாா். அங்கு பணியில் இருந்த உதவிப் பொறியாளா் வி.வெங்கடேசன், மஸ்தூா் பணியாளா் சி.ரமேஷ்குமாா் ஆகியோா் தடையில்லா சான்று அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, தடையில்லா சான்று பெற வி.வெங்கடேசன், சி.ரமேஷ்குமாா் ஆகியோரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் 2 பேரையும் பிடித்ததுடன், பணத்தையும் கைப்பற்றினா்.
இது தொடா்பான புகாரின்பேரில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன், ரமேஷ்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் சரவணன், குற்றம்சாட்டப்பட்ட உதவிப் பொறியாளா் வி.வெங்கடேசன், மஸ்தூா் பணியாளா் சி.ரமேஷ்குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G