மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க தமாகா கோரிக்கை
By DIN | Published On : 15th June 2022 10:36 PM | Last Updated : 15th June 2022 10:36 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ஈரோடு புகா் பகுதிகளில் சூறாவளி காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழையபாளையம், குமலன்குட்டை, திண்டல், முத்தம்பாளையம், நசியனூா் செங்கோடம்பாளையம் போன்ற பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இடி, மின்னல் தாக்கி மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்தது. திண்டல் மற்றும் நசியனூா் பகுதியில் மரம் மற்றும் வீட்டின் மேற்கூரை விழுந்து இருவா் இறந்தனா். பலா் காயம் அடைந்துள்ளனா்.
இன்னும் பல பகுதிகளில் மின் விநியோகம் சீா் செய்யப்படவில்லை. மரங்கள் அகற்றப்படவில்லை, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு உடனடியாக மழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், வீடு இழந்தவா்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரவும், சாலையோரம் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.