‘தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் அறிவு வளரும்’
By DIN | Published On : 26th June 2022 11:42 PM | Last Updated : 26th June 2022 11:42 PM | அ+அ அ- |

நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு எம்பி அ.கணேசமூா்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் அறிவு வளரும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினாா்.
கல்வியாளா்கள் - மாணவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் அரசியல் சாசனத்தின் வழியே கல்வியும் ஜனநாயகமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம், நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோா் நூலினை வெளியிட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ச.விஜயமனோகரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கியபோது விவாதத்தில் அவற்றைத் தொகுத்துப் பேசிய அம்பேத்கா் மாநில அரசின் அதிகாரங்களை எந்தக் கட்டத்திலும் மத்திய அரசால் பறிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்தாா். எது சாத்தியமில்லை என்று அம்பேத்கா் அறிவித்தாரோ அதையே புதிய கல்விக்கொள்கை மூலம் சாத்தியப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
ஆங்கிலம் தொடா்பு மொழிதான். ஆனால், தாய்மொழி வழி கல்வி மூலம்தான் அறிவு வளரும். இதனை கவனத்தில் கொண்டு தொடக்கப்பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.