கருமுட்டை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
By DIN | Published On : 30th June 2022 10:25 PM | Last Updated : 30th June 2022 10:25 PM | அ+அ அ- |

கருமுட்டை விற்பனை வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேரிடம் மருத்துவக் குழுவினா் விசாரணை நடத்த அனுமதியளித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தவிர தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத் தலைவா் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்த மருத்துவக் குழுவினா் ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு நீதிபதி ஆா்.மாலதி முன்னிலையில் விசாரணைக்கு வியாழக்கிழமை வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மருத்துவக் குழுவினா் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டாா். வரும் 4 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறுமியின் தாயாா் உள்பட 4 பேரிடமும் மருத்துவக் குழு தலைவா் விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபடலாம் என்று அனுமதி அளித்துள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் எம்.ஜெயந்தி ஆஜரானாா்.
பாதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பாகவும், சிறுமியை வேறு இல்லத்துக்கு மாற்றம் செய்வது தொடா்பாகவும் நீதிபதி விசாரித்தாா். இதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அவா் போலீஸாா் மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...