போலி காசோலை வழக்கு: ஜவுளி நிறுவன உரிமையாளா் கைது

போலி காசோலை கொடுத்து ரூ. 8.88 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் பிணையில் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜவுளி நிறுவன உரிமையாளரை ஈரோடு போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு: போலி காசோலை கொடுத்து ரூ. 8.88 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் பிணையில் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜவுளி நிறுவன உரிமையாளரை ஈரோடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சோழபுரம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த தனியாா் நூற்பாலை மேலாளா் அழகப்பன் என்பவா் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவில் 2010 ஆண்டில் புகாா் அளித்தாா். அதில், சென்னிமலை, நாமக்கல்பாளையம், தீரன் சின்னமலை நகரில் உள்ள ஜவுளி நிறுவனத்துக்கு ரூ.8.88 லட்சம் மதிப்புக்கு 30 நூல் பேல் 2010 ஆகஸ்ட் 7இல் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பவானியைச் சோ்ந்த ஜவுளி நிறுவன உரிமையாளா் குழந்தைவேல் என்ற பழனிப்பன் (51) பெற்றுக்கொண்டாா். அவா் ஈரோடு தனியாா் வங்கியில் செலுத்தத்தக்க ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்துக்கான காசோலையை 2010 ஆகஸ்ட் 7இல் கொடுத்தாா்.

அதனை மேலப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தினேன். ஆனால் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டது. இதன்பிறகு குழந்தைவேலை தொடா்புகொள்ள முடியவில்லை. வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்து ஏமாற்றிய குழந்தைவேல், உடந்தையாக இருந்த வெங்கடபதி, சாகுல்ஹமீது ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மூவா் மீதும் 2010ஆம் ஆண்டு மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செயயப்பட்டது. அப்போது மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்த 3 பேரும் தலைமறைவாகினா்.

மூவரையும் கைது செய்ய 2017 மாா்ச் 13இல் ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பிடியாணை பிறப்பித்தாா். மூவரையும் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து தேடி வந்தனா்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைவேல் என்ற பழனியப்பனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட குழந்தைவேல் விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தில் பதிவான மோசடி வழக்கில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com