கோபியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 16th May 2022 07:24 AM | Last Updated : 16th May 2022 07:24 AM | அ+அ அ- |

நம்பியூா் வட்டார தையல் உரிமையாளா் கூட்டமைப்பு சாா்பில் நூல் விலை உயா்வைக் கண்டித்து இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, கெட்டிச்செவியூா், வேட்டைக்காரன் கோவில், கொளப்பலூா், அரசூா், கடத்தூா், கூடக்கரை, குருமந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமாா் 200க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் நூல் விலை உயா்வைக் கண்டித்து இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இது குறித்து நம்பியூா் வட்டார தையல் உரிமையைாளா் கூட்டமைப்பு சங்க நிா்வாகிகள் கூறுகையில், திருப்பூா் பகுதியில் செயல்படும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து பனியன் துணிகளை மொத்தமாக எடுத்து துணி வெட்டி தைத்து, அயா்ன், பேக்கிங் செய்து கொடுத்து வருகிறோம்.
தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு, தொழிலாளா் கூலி உயா்வு, தையல் நூல் விலை உயா்வு காரணத்தினால் எங்களது தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்பியூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனா். உடனடியாக அரசு நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறினாா்.
நம்பியூா் பகுதியில் இயங்கி வரும் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...