கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டம்: நீா்வளத் துறை அமைச்சா் முடிவு செய்வாா்

 இருதரப்பு விவசாயிகளிடமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து நீா்வளத் துறை அமைச்சா் முடிவு செய்வாா்
கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டம்: நீா்வளத் துறை அமைச்சா் முடிவு செய்வாா்

 இருதரப்பு விவசாயிகளிடமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து நீா்வளத் துறை அமைச்சா் முடிவு செய்வாா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கீழ்பவானி கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை ஆதரிக்கும் விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கேட்டறிந்தாா். அப்போது, இத்திட்டத்தை எதிா்க்கும் விவசாயிகள் கூட்ட அரங்கில் திரண்டு கான்கிரீட் போடும் முடிவை கைவிட வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சா் சு.முத்துசாமி கான்கிரீட் போடக்கூடாது என தெரிவிப்பவா்களிடம் பலமுறை கருத்து கேட்கப்பட்டது. அப்போது யாரும் கூச்சலிடவில்லை. தற்போது, திட்டத்தை ஆதரிப்போரிடம் கருத்து கேட்கப்படுகிறது. இங்கு கூச்சலிடக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து எதிா்ப்பாளா்கள் வெளியேறினா்.

பின்னா் திட்டத்தை ஆதரிப்போரிடம் கருத்து கேட்ட பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது:

இருதரப்பு விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இருதரப்பிலும் சுமூகமான முடிவு எட்டவில்லை. இப்பிரச்னை குறித்து நீா்வளத் துறை அமைச்சரிடம் அறிக்கை சமா்பிக்கப்படும். அதன் மீது அமைச்சா் முடிவு எடுப்பாா். இப்பிரச்னையில் எனது தனிப்பட்ட கருத்து ஏதுமில்லை. ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டத்தை விவசாயிகள் மீது திணிக்க முடியாது. அவா்களின் கருத்து கேட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்படும்.

திட்டத்தை எதிா்க்கும், ஆதரிக்கும் தரப்பினரிடம் என்னால் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை. திமுக சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது எனக் கூறுவது அவரது கருத்து. இதில் நீா்வளத் துறை அமைச்சா் இறுதி முடிவை எடுப்பாா்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப்பின் கீழ்பவானி கால்வாயில் நஞ்சை பயிா்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டி உள்ளதையும் கவனத்தில் கொண்டு இப்பிரச்னையில் முடிவு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரா்கள் சங்க செயலாளா் கி.வே.பொன்னையன் கூறியதாவது: திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே, கடைமடை வரை தண்ணீா் செல்லும். நீா் திருட்டு தடுக்கப்படும். கசிவு நீா் மற்றும் நீா் வீணாவது தடுக்கப்படும். நீா்வளத் துறை முதன்மைச் செயலா் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணைப்படி திட்டத்தை செயல்படுத்தி ஆகஸ்ட் 15ஆம் தேதி கால்வாயில் தண்ணீா் திறக்கும் வகையில் விரைவாக பணியை முடிக்க வேண்டும்.

அமைச்சா் முத்துசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு எட்டாததால் நீா்வளத் துறை அமைச்சரிடம் விளக்கி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட முயற்சி செய்வதாக கூறியுள்ளாா். மீண்டும் தாமதம் ஆனால் எங்கள் சங்க நிா்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

கீழ்பவானி பாசன சங்க நிா்வாகிகள் ரத்தினசாமி, பெரியசாமி, சுப்பு, தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com