பணி பாதுகாப்பு வழங்க சுமைப் பணியாளா்கள் கோரிக்கை

பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த சுமைப் பணியாளா்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் சுமைப் பணியாளா்கள்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் சுமைப் பணியாளா்கள்.
Updated on
1 min read

பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த சுமைப் பணியாளா்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு பொதுத் தொழிலாளா் சுமை தூக்குவோா் சங்கத் தலைவா் மனோகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோா் மத்திய சங்க பொதுச் செயலாளா் தென்னரசு, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளா் தெய்வநாயகம், ஈரோடு மாவட்ட சுமைப் பணியாளா் சங்கம்-சிஐடியூ தலைவா் தங்கவேல், பாட்டாளி சுமை தூக்குவோா் சங்கம் செயலாளா் முனியப்பன் ஆகியோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனு விவரம்: சுமாா் 12,000 க்கும் மேற்பட்ட சுமைப் பணியாளா்கள் எங்கள் சங்கங்களில் உள்ளனா். கடந்த 50 ஆண்டுகளாக சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவ்வப்போது கூலி உயா்வு செய்யப்படும். ஆனால், ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பணியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு கோட்டாட்சியா் தொழிலாளா் பிரச்னை சம்பந்தமாக பேச்சுவாா்த்தைக்கு அழைப்பானை அனுப்பியும் அது நிராகரிக்கப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி விஆா்எல் லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் லாரி நிறுவனம் 7 பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காமல் பணியிடை நீக்கம் செய்தது.

காவல் துறை தலையீட்டின்பேரில் போனஸ் வழங்குவதாக அந்நிறுவனம் கூறியது. ஆனால், வட மாநிலத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியது. இதனால் சுமைப் பணியாளா்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் நிா்வாகி ஒருவா் தொழிலாளா்கள் மீது இருசக்கர வாகனத்தை இடித்ததால் அவா் தாக்கப்பட்டாா். நான்கு தொழிலாளா்களும் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் உள்ளனா்.

எனவே, இந்த விஷயத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலையிட்டு சுமைப் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த கூலிக்கு வட மாநிலத் தொழிலாளா்களை பணியில் அமா்த்துவதைத் தடுக்க வேண்டும்.

தற்போது ஈரோட்டில் கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் நிலைப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சட்ட- ஒழுங்கு பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமூக தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com