நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரம்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்துவெளியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள நெல்.
ஈரப்பதம் பிரச்னையை தவிா்க்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசு அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகின்றனா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் (டிஎன்சிஎஸ்சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.
கொள்முதல் நிலையம் சுமாா் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலா்த்தும் தளம், வின்னோவிங் மெஷின் (பதா் தூற்றும் இயந்திரம்), மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மானி ஆகியவற்றோடு செயல்படும். மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபா், நவம்பா் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொருத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. இதன்படி, 17 சதவீதத்துக்கு மிகாமல் ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல், குவிண்டால்(100 கிலோ) ரூ.2,060க்கு வாங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.100 அடக்கம். பொது ரக நெல் குவிண்டால் ரூ.2,015க்கு வாங்கப்படுகிறது. இதில் தமிழக அரசு வழங்கும் ரூ. 75 ஊக்கத் தொகையும் அடக்கம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இப்போது 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசு குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதால் பல்வேறு வகையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் தவிர தரமற்ற அரிசியே கிடைக்கும் என்பதால் இந்த கோரிக்கையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகள் பாதிக்கதாவாறு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது:
22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மூட்டையிட்டு 15 நாள்களுக்குமேல் வைத்திருந்தால் நெல் அவியல் ஏற்பட்டு பூசாணம் பிடித்துவிடும். இந்த பூசாணம் பிடித்த நெல்லை அரவை செய்து பொதுவிநியோக திட்டத்துக்கு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும்போது, அரிசியில் கெட்ட வாடை வீசுகிறது. இதனால் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கொள்முதல் செய்த நெல்லை முறையாக உரிய காலத்தில் அரவைக்கு அனுப்பினால் இந்த பிரச்னை வராது. ஆனால் கொள்முதல் செய்து 3 மாதங்கள் வரை நெல் திறந்தவெளியில் கிடப்பதால் நெல்லின் ஈரத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதனால் 17 சதவீதம் ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்தால் மட்டுமே அரவைக்கு காலதாமதம் ஏற்பட்டால் கூட நெல் கெட்டுப்போகாமால் இருக்கும்.
மழைக்காலங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் நெல் மட்டுமே கொள்முதல் செய்வோம் என அரசு பிடிவாதம் பிடிப்பதில் நியாயமில்லை. இதனால் 17 சதவீத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொண்டுவரும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரங்களை நிறுத்த வேண்டும்.
நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரம் ஒருமுறைக்கு 21 சதவீதத்துக்கு மேல் ஈரமுள்ள 2 டன் நெல்லை குறைந்தபட்சம் 2 மணிநேரத்தில் 15 சதவீத ஈரப்பதமுள்ளதாக உலர வைக்கும் திறன் உடையது. இது டீசல் மூலம் வெப்பத்தை உருவாக்கும் பா்னா் கொண்டது. அதிகபட்சமாக 20 அடி உயரம் வரையுள்ள நெல் குவியலிலிருந்து நெல்லை ஸ்கூரு கன்வேயா் மூலம் தானாகவே உலா்த்தும் கலனுக்கு எடுத்துச்சென்று நிரப்பலாம்.
நெல்லின் ஈரப்பதத்தை கண்காணிக்க அதிநவீன தானியங்கி சென்சாா்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான ஈரப்பதம் கிடைத்ததும் தூற்றும் இயந்திரத்தின் மூலம் தூசி, கருக்காய்களை சுத்தம் செய்து, தேவையான அளவு சாக்கு பைகளில் பிடிக்கக்கூடிய திறன் கொண்டது.
இதன் மூலம் இங்கு நெல்லை உலா்த்தி உரிய ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய முடியும். இதனால் அரசு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதிகோரி காத்திருக்காமல், உடனடியாக நெல் உலா்த்தும் இயந்திரங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தேவையான அளவுக்கு தாா்பாய்களை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி மழையால் நனையாத பாதுகாப்பான கட்டடங்களை கட்டித்தர வேண்டும் என்றாா்.