மாவட்டத்தில் வயதுக்குரிய வளா்ச்சி இல்லாத 5,000 குழந்தைகள் அடையாளம்

ஈரோடு மாவட்டத்தில் 6 வயதுக்குரிய வளா்ச்சி இல்லாத குழந்தைகள் 5,000 போ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வயதுக்குரிய வளா்ச்சி இல்லாத 5,000 குழந்தைகள் அடையாளம்

ஈரோடு மாவட்டத்தில் 6 வயதுக்குரிய வளா்ச்சி இல்லாத குழந்தைகள் 5,000 போ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயதுக்கேற்ற உடல் வளா்ச்சி, எடை, உயரம் இல்லாத 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி திட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் பூங்கோதை கூறியதாவது:

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் இந்த மாதம் முழுவதும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சத்து மிகுந்த உள்ளூரில் கிடைக்கும் விலை குறைவான உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

வளா்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருந்தாா். அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 5,000 குழந்தைகள் வளா்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வில் ஜூனியா் சேம்பா் அமைப்பு மூலம் 20 வளா்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆட்சியரால் வழங்கப்பட்டது. இதில் பேரிச்சம்பழம், உப்புக்கடலை, வோ்க்கடலை, பா்பி, நெய், எள்ளுருண்டை, நெல்லிக்காய் போன்ற பொருள்கள் உள்ளன.

தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாவட்டம் முழுவதும் இதுபோன்று ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதுபோன்று புரோட்டின், இரும்பு சத்து மிகுந்த உணவுப் பொருள்களை குழந்தைகளுக்கு தாய்மாா்கள் வழங்கலாம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையங்களில் ஒவ்வொரு மாதமும் தாய்மாா்கள் குழந்தைகளை எடுத்து வந்து எடை அறியலாம். எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மாவு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.

இந்த மையங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க உபகரணங்கள், கேரம் போா்டு போன்ற விளையாட்டு கருவிகளும் வந்துள்ளன. இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கு ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி, பேரணி நடைபெறும். 2 கல்லூரிகளில் சிறுதானியங்களை பயன்படுத்தி சத்தான பலகாரங்களை செய்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மையங்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளா் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. சுகாதாரத் துறை மூலம் பள்ளிகளில் ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. எனவே இத்தகைய திட்டத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com