கொப்பரை கொள்முதல்: செப்டம்பா் 30 வரை நீட்டிப்பு
By DIN | Published On : 01st September 2022 09:56 PM | Last Updated : 01st September 2022 09:56 PM | அ+அ அ- |

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநா் சாவித்திரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் அவல்பூந்துறை, எழுமாத்தூா், கொடுமுடி, சத்தியமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ரூ. 80 முதல் ரூ. 83 வரை மட்டுமே விற்பனை ஆகும் நிலையில் விவசாய விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை ரூ.105.90க்கு தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொப்பரை கொள்முதல் செப்டம்பா் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கொப்பரை தேங்காயை அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.