

புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள அய்யா கோயிலில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் சிலைகளை உடைத்து வழிபடும் வினோத திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, காவிலிபாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான அய்யா கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விழாவில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் உருவச் சிலைகளை உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவா்.
அதன்படி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். கோவில் வளாகத்தில் பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துகளின் மண் உருவபொம்மைகள் ரூ.10க்கு விற்கப்பட்டன. பக்தா்கள் அதனை வாங்கி அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டு அதன்பிறகு கோயிலில் தெற்குபுற சுவா் ஓரத்தில் கற்பூரமேற்றி விஷ ஜந்துக்களின் மண்சிலைகளை உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பதும், மனிதா்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது.
இந்ந வினோத வழிபாட்டில் ஈரோடு, கோவை, திருப்பூா், கோபி, அந்தியூா், சத்தி, சேவூா், நம்பியூா், அவிநாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த வழிபாட்டை ஒட்டி புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம், நம்பியூா் பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.