

ஈரோடு-பெருந்துறை சாலை பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஈரோடு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தோ்வுகள் மற்றும் இணையவழியில் நடைபெறும் விநாடி வினா போன்ற தோ்வுகள் மூலமாக தோ்வு செய்யப்பட்ட மாணவா்களைக் கொண்டு பெருந்துறை சாலை பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
பிளஸ் 2 வகுப்பில் 139, பிளஸ் 1 வகுப்பில் 87 மாணவா்களுடன் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா இப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு பள்ளி நூலகம், ஆசிரியா்களின் எண்ணிக்கை, மாணவா்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவா்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத் தூய்மை, வருகைப் பதிவேடு, விடுதிகள் மற்றும் உணவகத்தைப் பாா்வையிட்டாா். முந்தைய மாணவா்கள் பங்கு பெற்ற போட்டித் தோ்வுகள் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை, மாணவா்கள் தோ்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களின் பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்ததாா். அப்போது, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இலக்கை நிா்ணயிக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்க வேண்டும். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை தகா்த்து விட்டு வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றும், மாணவா்கள் சாதனையாளா்களாக மாறி வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். மாணவா்களின் கவிதை, பாடல், பேச்சு, சித்திரத்தையல் போன்றவற்றைக் கண்டு பாராட்டியதுடன், தன் கையொப்பமிட்ட புத்தகங்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) வினய்குமாா் மீனா, துணை ஆட்சியா் (பயிற்சி) காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் குழந்தைராஜன், உதவி திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியா் கோபால், ஒருங்கிணைப்பாளா் மாதுனியாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.