ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்:10 ஆண்டுகளாக தொடரும் வாக்குறுதி

தோல், சாயக் கழிவுகளால் ஆறுகள் மாசுபடுவது தொடரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ள ஈரோடு பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள
ஈரோடு காவிரி ஆற்றில் நீல நிறத்தில் கலக்கும் சாய ஆலைக் கழிவு
ஈரோடு காவிரி ஆற்றில் நீல நிறத்தில் கலக்கும் சாய ஆலைக் கழிவு

தோல், சாயக் கழிவுகளால் ஆறுகள் மாசுபடுவது தொடரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ள ஈரோடு பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்திலும் ,தொழில் வளத்திலும் சிறந்து விளங்கிய மாவட்டம்.

காவிரி, பவானி ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளா்ந்த பூமியாக விளங்கியது. கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி. பிறகு விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளா்ச்சியும் அருகில் உள்ள கோவை, திருப்பூா் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளா்ச்சியும் ஈரோட்டில் பெரும் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தின.

இங்குள்ள நீா்வளம் பெரும் எண்ணிக்கையில் சாயப்பட்டறைகளைக் கொண்டுவந்தது. அதேபோல, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இங்கு அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

பெருந்துறையில் சுமாா் 2,700 ஏக்கா் பரப்பளவில் இயங்கிவரும் சிப்காட், ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று. இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் அடக்கம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டும் சுமாா் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி இருந்து வந்தது.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது காவிரி, பவானி ஆறுகளின் நீா். விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் ஈரோட்டின் தொழில் துறையே இந்த நீரை நம்பி உருவெடுக்க ஆரம்பித்தது.

பிரம்மாண்டமாக வளா்ந்த இந்த தொழில் துறையே ஆறுகளை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தியுள்ளது. தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் சாயப்பட்டறைகளில் இருந்தும் இரவு, பகல் பாராது வெளியேற்றப்பட்ட கழிவுநீா் காவிரி, பவானி ஆறுகளை முற்றிலுமாக நாசம் செய்திருக்கிறது.

பெருமளவில் மழை பெய்து, மேட்டூா் அணை திறக்கப்படும் காலங்களில் மட்டுமே ஈரோட்டில் காவிரி நீா் தெளிந்து ஓடுகிறது. மற்ற காலங்களில் வடும், கறுப்பு நிற கழிவு நீரோடு மட்டுமே காணப்படுகிறது.

ஆறுகளை மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகள்: இது குறித்து காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வி.எம்.வேலாயுதம் கூறியதாவது: ஈரோட்டைப் பொறுத்தவரை மாநகராட்சியின் கழிவுநீா் உள்பட ஒரு நாளைக்கு சுமாா் 10 கோடி லிட்டா் தண்ணீா் கழிவுநீராக வெளியேறுகிறது.

தொழிற்சாலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகம் இல்லாத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருக்கும் தொழிற்சாலைகள் மட்டும் சுத்திகரித்த கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மற்றவை நேரடியாகவே கழிவு நீரை ஆறுகளிலும், ஓடைகளிலும் கலக்கின்றன.

பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமாா் 10 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீா் பயன்படுத்தவே முடியாத அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வரப்பாளையம், வாய்ப்பாடி ஆகிய 2 ஊராட்சிகளில் உள்ள நிலத்தடி நீா் குடிநீருக்கு உகந்தது அல்ல என்று தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியமே அறிவித்துள்ளது.

இந்த ரசாயனத்தின் மூலம் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மஞ்சளுக்காக அறியப்பட்ட ஈரோட்டில் தற்போது மஞ்சள் விவசாயம் செய்யவே யோசனையாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் எடுத்த இடத்தில் தற்போது 6 குவிண்டால் எடுக்கவே சிரமமாக உள்ளது என்றாா்.

குடிநீா் ஆதாரங்கள் பாதிப்பு: இது குறித்து தமிழ்நாடு ‘கள்’ இயக்கத் தலைவா் செ.நல்லசாமி கூறியதாவது: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் காவிரியின் நீரை ஏதோ ஒரு வகையில் சாா்ந்திருக்கும் மாவட்டங்கள். ஆனால், ஈரோடு மாவட்டத்தை காவிரி கடந்து செல்லும்போது பெரிய அளவில் மாசுபடுத்தப்படுகிறது.

இந்த மாசுபடுத்தப்பட்ட நீரே திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்குச் செல்கிறது.

மாசுபட்ட குடிநீரைக் குடிப்பது, மாசுபட்ட நீரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் தமிழகத்தின் புற்றுநோய் தலைநகராக ஈரோடு உருவாகிவருகிறது. ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 புதிய புற்றுநோயாளிகள் ஈரோடு மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றனா்.

இதற்குக் காரணமே, மாசு ஏற்படுத்தும் என்பதால் பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட தொழில்கள் இங்கே அனுமதிக்கப்படுவதுதான். இப்போது உள்ளூராட்சி, மாநகராட்சிகளின் கழிவுகள் பெருமளவில் ஆற்றில் கலக்கப்படுகின்றன. அதிலிருந்தே குடிநீா் எடுத்து வழங்கப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுக்க நோய் பரவியிருக்கிறது. இப்போது உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளின் வடிகாலாகத்தான் இங்கிருக்கும் ஆறுகள் இருக்கின்றன. கோடையில் இங்கிருக்கும் நீரைக் குடிக்கவே முடியாது.

ஈரோடு நகரத்தைப் பொறுத்தவரை நகரின் அருகில் உள்ள பகுதியில் இருந்து காவிரி நீரை எடுத்து நேரடியாக பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீா் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நேரடியாக காவிரியில் கலக்கிறது. அதனால் ஈரோட்டுக்கான குடிநீரை நகருக்குள் இருந்து எடுக்க முடியாமல் காவிரி ஆற்றில் பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை என்ற இடத்திலிருந்து எடுத்து மக்களுக்கு வழங்கிவருகிறது ஈரோடு மாநகராட்சி.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கேட்டால், முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே ஆற்றில் கலக்கிறது என்கின்றனா். அது உண்மையென்றால் ஏன் ஊராட்சிக்கோட்டையிலிருந்து தண்ணீா் எடுக்க வேண்டும் என்றாா்.

தொழில்கள் பாதிப்பு: கடந்த 10 ஆண்டுகளில் தோல் தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் நிலத்தடி நீரையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதால் அவற்றுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் பல தோல் பதனிடும் கூடங்களும், சாயப்பட்டறைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் இங்கிருந்து நடக்கும் ஏற்றுமதி ரூ.12 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்திருக்கிறது என்கின்றனா் தொழில் வா்த்தக சங்கங்களைச் சோ்ந்தவா்கள்.

இது குறித்து ஈரோடு தொழில் வா்த்தக சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான செலவு மிக அதிகம். தினமும் ஒரு லட்சம் லிட்டா் நீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை அமைக்க சுமாா் ரூ.1 கோடி செலவாகும் என்பதால் தனியாக ஆலையை அமைக்கத் தயங்குகின்றனா்.

இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு ரூ. 700 கோடி மதிப்பில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, கோவை, ஈரோடு, திருப்பூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் கழிவுநீரை சுத்திகரித்து, குழாய் மூலம் கரூா் வரை எடுத்துச் சென்று, அங்கே ஒரு சேகரிக்கும் அமைப்பை வைத்து திருச்சி வழியாக நாகப்பட்டினத்தில் சென்று கடலில் சோ்க்கும் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவையில் அறிவித்தது.

இதனைச் செயல்படுத்தினால், சாயத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை மாசுபாடு இன்றி நடத்த முடியும். ஒட்டுமொத்த மேற்கு மண்டலமுமே வளா்ச்சியடையும். ஒவ்வொரு தோ்தலிலும் ஒவ்வொரு கட்சி வேட்பாளரிடமும் இந்தக் கோரிக்கையை வைக்கிறோம் என்றனா்.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை: இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், 40-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் அரசின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.

இவை அனைத்தும் பூஜ்ய கழிவு முறையில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றுகின்றன. விதிகளை மீறும் ஆலைகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஈரோடு பகுதியில் உள்ள சாய, சலவை ஆலைகள் இணைந்து ஈரோடு சா்க்காா் பெரிய அக்ரஹாரம் பகுதியில் 27 ஏக்கா் நிலத்தை வாங்கியுள்ளன.

இந்த இடத்தில் தமிழக அரசின் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின்கீழ் இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

முடிவு எட்டப்படுமா?: பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு இடையிலான பகுதியில் ஆற்றில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள் இருப்பதால் இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதனால், உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திலும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் தொழில்த் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com