கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட 6 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் மாயம்

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட 6 பவுன் நகை, ரூ.3255 திருடப்பட்டது குறித்து, நீதிமன்றம் அளித்த புகாரின் பேரில் கோபி போலீஸாா் விசாரித்து வருகின்ற

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட 6 பவுன் நகை, ரூ.3255 திருடப்பட்டது குறித்து, நீதிமன்றம் அளித்த புகாரின் பேரில் கோபி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1 உள்பட 5 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபி குற்றவியல் நீதிமன்றம் எண்1 நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டி சீல் வைத்து அந்தப் பெட்டகம் கோபி சாா்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற ஊழியா் ஆனந்தன் மற்றும் பங்களாப்புதூா் காவலா்கள் ஆகியோா் குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தொடா்புடைய பெட்டகத்தை கோபி கருவூலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை எடுத்து வந்தனா். அந்தப் பெட்டியை மாஜிஸ்திரேட் தனது அறையில் வைத்துத் திறக்க முயன்றபோது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டிருந்த அரக்கு சீல் உடைக்கப்படாமல் அப்படியே இருந்துள்ளது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டியிருந்த கொண்டியிலிருந்து ஆணி கழற்றப்பட்ட நிலையில் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்து பெட்டியை திறந்து பாா்த்தபோது, அதில் கடம்பூா் போலீஸாரால் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்கச் சங்கிலி, சத்தி வனத் துறை, பங்களாப்புதூா் மற்றும் கோபி போலீஸாா் தொடா்ந்த வழக்கில் பறிமுதல் செய்து வைத்திருந்த ரூ. 3 ஆயிரத்து 255 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கோபி குற்றவியல் நீதிபதி விஜய் அழகிரி அளித்த புகாரின் பேரில் கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com