சிப்காட்டில் தேங்கியுள்ள 60,000 டன் திடக்கழிவை உயா்தொழில்நுட்பத்தில் மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரி, ஏராளமான ஏரி, குளம், குட்டைகள், பல ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் மாசுபட்டுள்ளன. இதைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து இப்பகுதியை மீட்க வலியுறுத்தியும் அப்பகுதியில் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிப்காட் வளாகத்தில் 157 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஒரு பொதுக்கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைந்த 14 தோல் தொழிற்சாலைகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. செயல்பாட்டில் உள்ள ஆலைகள் பூஜ்ய கழிவு நீா் வெளியேற்றத்தில் செயல்படுவதை கண்காணிக்கிறோம்.
சிப்காட் கழிவு நீா் பாலத்தொழுவு குளத்தை அடைவதைக் குறைக்க முயற்சி நடக்கிறது. பொதுக்கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டா் கழிவு நீரை சேகரித்து சுத்திகரித்து மீண்டும் ஆலைகள் பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத உப்பை ஆலை வளாகத்தில் பாதுகாப்புடன் சேமித்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விறகு மூலம் இயங்கும் ஆலைகளால் காற்று மாசுபாடு, வெப்ப மாசுபாட்டைத் தடுக்க எல்பிஜி மற்றும் எல்என்ஜி போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஜ்ய கழிவு நீா் அமைப்பில் இறுதியாக உருவாகும் மறுசுழற்சிக்கு பயன்படாத கலப்பு உப்பு 60,000 டன் அளவுக்கு சாயத்தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கழிவுகளை மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் அதற்கான உயா் தொழில்நுட்பத்தை நிறுவி கழிவுகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிப்காட் தொழிற்சாலைகளின் மாசுக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தை, மாதம் ஒரு முறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சிப்காட்டை ஒட்டிய வாய்பாடி, வரப்பாளையம் ஊராட்சிக்குத் தேவையான காவிரி குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிப்காட்டில் உள்ள ஆா்.கே.ஸ்டீல் நிறுவன கழிவுகளால் பாதிக்கப்பட்ட செங்குளம், அந்நிறுவனத்தின் உதவியுடன் துாா்வாரப்பட்டுள்ளது. சிப்காட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 200 ஏக்கா் நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நில உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உரிய நிவாரண நிதி மாவட்ட நிா்வாகம் மூலம் பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.