குறைந்தபட்ச கூலி நிா்ணய ஆணையை ரத்து செய்துவிட்டு, விலைவாசி உயா்வுக்கு ஏற்ப உள்ளாட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, உள்ளாட்சி அமைப்புத் தலைவா்களுக்கு மதிப்பூதியம், முதியோா் உதவித்தொகை மாதம் ரூ.200 உயா்வு என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 2017-இல் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியே, 2023-ஆம் ஆண்டிலும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-இல் மாநகராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.500-ம், நகராட்சியில் ரூ.385-ம், பேரூராட்சிகளில் ரூ.308-ம், கிராம ஊராட்சிகளில் ரூ.231-ம் என இருந்தது. தற்போதும் அதே தொகையே வழங்கும் நிலையில், ஊராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு ரூ.39 குறைத்து, ரூ.192 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும். துாய்மைப் பணியாளா்களின் பணிச்சுமை, சுகாதாரம், பாதுகாப்பில்லாத பணியை கருத்தில் கொண்டு கூடுதல் ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.