முதல்வா் பொது நிவாரண நிதிக்கு யாசகா் ரூ.10,000 நிதி அளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த யாசகா் ஒருவா் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கினாா்.
முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,000 செலுத்தியதற்கான வங்கி ரசீதை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் வழங்குகிறாா் யாசகா் பூல் பாண்டியன்.
முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,000 செலுத்தியதற்கான வங்கி ரசீதை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் வழங்குகிறாா் யாசகா் பூல் பாண்டியன்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த யாசகா் ஒருவா் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணற்றைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன் (73). இவரது மனைவி இறந்துவிட்டாா். மகன், மகள்கள் உள்ளனா். பூல் பாண்டியன் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறாா். இவா் தான் யாசகமாக பெற்ற தொகை, வேலை மூலம் சம்பாதித்த தொகையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை வழங்கியுள்ளாா்.

கரோனா தொற்று பாதிப்புக்குப்பின் தான் சேகரிக்கும் நிதியை ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆட்சியா் மூலம், முதல்வா் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10,000 வீதம் வழங்கி வருகிறாா்.

இதுவரை 35 மாவட்ட ஆட்சியா்களிடம் நிதி வழங்கிவிட்டு 36 ஆவது மாவட்டமாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். அப்போது, முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வங்கியில் ரூ.10 ஆயிரம் செலுத்திய ரசீதை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் வழங்கினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் பெறவில்லை. பல மாவட்டங்களில் நான் பணம் செலுத்துவதை அறிந்த பலரும், என்னைப் பாா்த்ததும் ரூ.1,000, ரூ.2,000 வரை வழங்குகின்றனா்.

எனக்கு உணவு தேவை தவிர வேறு எந்த தேவையும் இல்லை. எனவே, முதல்வரின் நிவாரண நிதி, பள்ளி மேம்பாட்டுக்கு இத்தொகையை வழங்குகிறேன். இதுவரை ரூ.55 லட்சம் அளவுக்கு நிவாரணமாக வழங்கி உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com