அரசு ஐடிஐகளில் சேர ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 13th August 2023 12:00 AM | Last Updated : 13th August 2023 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு மற்றும் கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2023-ஆம் ஆண்டு சோ்க்கைக்கான இறுதி நாள் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மற்றும் கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2023-ஆம் ஆண்டுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தோ்ச்சி, 8 ஆம் தோ்ச்சி பெற்றவா்கள் அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலமாகச் சோ்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் கோபி மற்றும் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை வரும் 16 ஆம் தேதிக்குள் நேரில் அணுகலாம்.
பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா சிறந்த பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையல் கூலியுடன் 2 செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு, கோபி அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களை நேரிலோ அல்லது 0424-2275244, 04258-233234 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.