பள்ளி மாணவா்கள் 20 பேருக்கு வாந்தி, மயக்கம்:தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை
By DIN | Published On : 17th August 2023 04:00 AM | Last Updated : 17th August 2023 04:00 AM | அ+அ அ- |

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா்கள்.
பவானி அருகே பள்ளி மாணவா்கள் 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த பழனிவேல்புரம் பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் நத்தமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய மாணவா்களுக்கு புதன்கிழமை இரவு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் சாலையோரத்தில் இருந்த செடியில் உள்ள காயை (நாட்டுக்காய்) பறித்து உண்டதாக பெற்றோா்களிடம் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களை பூனாச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீஸாா், பள்ளிக் கல்வித் துறையினா் மாணவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...