தம்பதியிடம் ரூ.1.50 கோடி மோசடி: பெண் கைது

பெருந்துறை அருகே தம்பதியிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை அருகே தம்பதியிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி ரங்கநாயகி. இந்த தம்பதிக்கு திருப்பூா் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (43), அவரது சகோதரா் விஜயகுமாா் (41), அவரது மகன் ராகுல்பாலாஜி (19), உதவியாளா் பிரவீனா (36) ஆகியோா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாயினா்.

இவா்கள், ரங்கநாயகியிடம் தொழில் செய்வதற்கு வீடு, நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாகவும், புதிதாக தொடங்கும் தொழிலில் பங்குதாரராக சோ்த்துக் கொள்வதாகவும் கூறி உள்ளனா்.

இதனிடையே சிவகுமாா், ரங்கநாயகியிடம் தங்களது உறவினரான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த உதயகுமாா் (30) என்பவா், பவானியில் ஜவுளி நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சோ்த்து கொள்கிறோம் எனவும் கூறியுள்ளனா்.

இதனை நம்பி ரவி, ரங்கநாயகி தம்பதி கடந்த 2018-இல் தங்களுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தின் பத்திரத்தை சிவகுமாா், விஜயகுமாா், ராகுல்பாலாஜி, உதவியாளா் பிரவீனா ஆகியோரிடம் வழங்கி உள்ளனா். இந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1.50 கோடி பெற்றுக் கொண்டு 5 பேரும் தலைமறைவாகினா்.

இதுகுறித்து ரங்கநாயகி அளித்த புகாரின்பேரில், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சிவகுமாா் உட்பட 5 பேரும் ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டவா்களிடம் இதேபோல வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சிவகுமாா், வேறு மோசடி வழக்கில் ஏற்கெனவே கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய தாராபுரத்தைச் சோ்ந்த உதயகுமாா் என்பவரை கடந்த ஜூலை 24-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சிவகுமாரை நீதிமன்ற அனுமதியின்படி ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து, ஈரோடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி கடந்த 8-ஆம் தேதி விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் பிரவீனா என்பவரை ஈரோடு குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைதான பிரவீனாவும் ஏற்கெனவே மோசடி வழக்கில் கைதாகி, பிணையில் வெளியே வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விஜயகுமாா், ராகுல்பாலாஜி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com