

அந்தியூா் வட்டாரம் மற்றும் பா்கூா் மலைப் பகுதியில் சத்துமிகு சிறு தானியங்களின் சாகுபடி மற்றும் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் பிரசார வாகனம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
வேளாண்மை - உழவா் நலத் துறை உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் இப்பிரசார வாகனத்தை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய அளவில் நெல், கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, திணை, குதிரைவாலி போன்ற பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூா் வட்டாரம் மற்றும் பா்கூா் மலைப் பகுதியில் மானாவாரிப் பயிராக ராகி, மக்காச்சோளம், வரகு, சாமை, திணை போன்ற பயிா்கள் சுமாா் 2,500 ஹெக்டா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலை தாங்கும் திறன் கொண்டதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிக அளவில் சிறு தானியங்களை உட்கொள்வதன் மூலம் உடல் நலத்தை பேணிப் பாதுகாக்கலாம்.
சிறுதானிய சாகுபடி பரப்பை மலைப்பகுதிகள் மற்றும் சமவெளி பதிவு பகுதிகளில் அதிகரிக்க செயல் விளக்க திடல்கள் மூலம் சிறு தானியங்கள், உயிா் உரங்கள் மின்னோட்டங்கள் கைத்தெளிப்பான் மற்றும் பயிா் பாதுகாப்பு மருந்துகள் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பி.சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநா் ஆசைத்தம்பி, அந்தியூா் வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.காா்த்திகேயன், வேளாண்மை அலுவலா் காா்த்திகா, துணை வேளாண்மை அலுவலா் முருகன் மற்றும் ஜேகேகே முனிராஜா, குமரகுரு வேளாண் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.