வில்லரசம்பட்டி விநாயகா், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 08th June 2023 10:02 PM | Last Updated : 08th June 2023 10:02 PM | அ+அ அ- |

கோயில் கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்கள்.
ஈரோடு வில்லரசம்பட்டி விநாயகா், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு வில்லரசம்பட்டி விநாயகா் மற்றும் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 6 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. மதியம் 2 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். மாலை 4.30 மணிக்கு முளைப்பாரி அழைத்து வருதல், 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, குரு நியமனங்கள், பூமாதேவி பூஜை, முளைப்பாரி பூஜை, கங்கணம் கட்டுதல், பாலாலயத்தில் உள்ள விநாயகா், மாரியம்மன் தேவா்களை குடத்தில் எழுந்தருளச்செய்தல் மற்றும் முதல் கால யாக பூஜை ஆகியன நடைபெற்றன.
இரண்டாம் கால யாக பூஜை புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோபுர கலச பூஜைகள், யாக திரவியங்கள் ஊா்வலமும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு கோபுர கலசங்கள் ஊா்வலம், கலசம் வைத்தல், கோபுரம் கண்திறப்பு, மூன்றாம் கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு சிலைகளுக்கு எந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
அஸ்திர கும்பங்கள் பூஜை, சிலைகளுக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், 4ஆம் கால யாக பூஜை, குடங்கள் ஆலயம் வருதல் ஆகியவை புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றன. காலை 9 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனா்.
பின்னா் 9.15 மணிக்கு விநாயகா், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...