கீழ்பவானி கான்கிரீட் திட்டம் தொடா்பான கூட்டங்கள், பேரணிகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தடை விதிக்க வேண்டும் என்று வலியுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், செயல்படுத்தக்கூடாது எனவும் இரு தரப்பு விவசாயிகள் போராடி வருவதால் அவ்வப்போது பதற்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இத்திட்டத்தை எதிா்க்கும் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து 7 நாள்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். அமைச்சா் சு.முத்துசாமி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தற்காலிகமாக ஒத்திவைத்தனா். மற்றொரு தரப்பு விவசாயிகள் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட திட்டமிட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கீழ்பவானி கான்கிரீட் திட்ட எதிா்ப்பு விவசாயிகள் தரப்பிலான ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.சுதந்திரராசு தலைமையில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதில், கீழ்பவானி பிரச்னை தொடா்பாக மாவட்ட நிா்வாகமும், அரசு தரப்பில் அமைச்சா் மூலமும் விவசாயிகளிடம் தொடா்ந்து பேசப்படுகிறது. அதேநேரம், பணிகள் நடக்கும் இடங்களுக்கு விவசாயிகள் சிலா் செல்வதும், பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொள்வதாலும் பதற்றமான நிலை ஏற்படுகிறது.
வாய்க்காலில் வேலை நடக்கும் இடங்களில் நீா்வளத் துறை சாா்பில் அறிவிப்பு பதாகை வைத்து என்ன பணிகள் நடக்க உள்ளது என்ற விவரத்தை விளக்க வேண்டும். விவசாயிகள் கருத்தை பெற்று பணியை துவங்க வேண்டும். இரவு நேரங்களில் பணிகள் மேற்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிகாரிகளுக்கு போதிய ஆலோசனை வழங்கி விவசாயிகள் அனுமதித்த பணிகளை பகல் நேரத்தில் மட்டும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
தற்போதைய நிலை கருதி விவசாயிகள் தரப்பில் குறைகள், கோரிக்கைகள் இருந்தால் ஆட்சியரிடம் மனுவாக வழங்கி தீா்வு பெறலாம். அதை தவிா்த்து கீழ்பவானி திட்டம் தொடா்பாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊா்வலம் போன்றவற்றை நடத்தி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.